வெள்ளி, 29 ஏப்ரல், 2011

பாரம்பரிய சீன நகைச்சுவைகள் 100 என்ற புத்தகத்திலிருந்து (#10)

சூச்சோவில் வாழ்ந்த ஒரு பணக்காரனுக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தான். 30 வயது ஆகியும் 50 வயதான தந்தையின் உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் சோதிடர் ஒருவரை அவர்கள் சந்தித்தார்கள். ஜாதகத்தைக் கணித்த அவர், தந்தை 80 வயது வரையிலும், மகன் 62 வயது வரையிலும் வாழ்வார்கள் என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் 'எங்க அப்பா 80 வயதில் சாகப் போகிறார், 60 வயதுக்குப் பிறகு எனது கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு யார் என்னைக் காப்பாத்துவாங்க' என்று கதற ஆரம்பித்தான் மகன்.

சீன நகைச்சுவைகள் #23

ஒரு ஊரில் ஒரு வடிகட்டிய கஞ்சன் இருந்தான், வீட்டில் விசேஷம் என்று யாரையும் சாப்பிடக் கூப்பிட்டதே இல்லை.

ஒரு நாள் அவனது பக்கத்து வீட்டுக்காரர் விருந்து கொடுப்பதற்கு, இந்தக் கஞ்சன் வீட்டு முன்னறையைப் பயன்படுத்தினார்.

அந்த வழியாகப் போன ஒருவர் வீட்டுக்குள் பரபரப்பைப் பார்த்து, கஞ்சனின் வேலைக்காரனிடம் 'உங்க எஜமான் வீட்டுக்கு விருந்தாட்களை எல்லாம் அழைத்திருக்கிறார் போலிருக்கிறதே?' என்று கேட்டார்.

'நிச்சயமா இல்லை', வேலைக்காரன் பதில் சொன்னான். 'இன்னும் நாலைந்து தலைமுறை போன பிறகுதான் எங்க எஜமான் விருந்து அளிக்கிறார் என்று உங்கள் காதில் விழும்'.

இதைக் கேட்ட எஜமான், 'இப்படி தேதியை முடிவு செய்ய உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்' என்று வேலைக்காரனை காய்ச்சி எடுத்து விட்டான்.

சீன நகைச்சுவைகள் #26

வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு தேநீர் கொடுக்க விரும்பிய வீட்டுக்காரர், வேலைக்காரனை பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை கடன் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்.

அவன் வருவதற்காக காத்திருக்கும் நேரத்தில், வெந்நீர் போடும் பாத்திரத்தில் நீர் கொதிக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். சிறிது நேரத்தில் மீண்டும் நீர் கொதிக்க ஆரம்பித்தது, மீண்டும் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது. இதே போல பல முறை நடந்து பாத்திரம் நிறைந்து போன பிறகும் வேலையாள் இன்னும் திரும்பி வரவில்லை.

வீட்டுக்காரரின் மனைவி, 'வந்திருப்பவர் உங்கள் நெருங்கிய நண்பர்தானே, அவரை ஒரு வெந்நீர் குளியல் போடச் சொல்லலாமே' என்று ஆலோசனை சொன்னாள்.

சீன நகைச்சுவைகள் #28-2

பட்டப்பகலில் வீட்டை உடைத்துத் திருடப் போன திருடன், பூசை மணியை திருடிக் கொண்டு வெளியே வந்தான். வாசலைத் தாண்டி தெருவுக்கு வரும் நேரத்தில், வீட்டு உரிமையாளர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு வணக்கம் சொன்ன திருடன் 'தாத்தா, பூசை மணி வாங்கிக்கிறீங்களா?' என்று கேட்டான்.

'வேண்டாம்பா, வீட்டில ஏற்கனவே இருக்கு' என்றார்.

திருடிய பொருளுடன் ஜாம் ஜாம் என்று போய் விட்டான் திருடன். மாலையில் பூசைக்காக மணியைத் தேடும்போதுதான் வீட்டுக்காரருக்கு திருட்டு போனது தெரிய வந்தது.

சீன நகைச்சுவைகள் - #28-3

ஒருவன் பாத்திரம் ஒன்றைத் தோளில் சுமந்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தான். வழியில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கவே, பாத்திரத்தைக் கீழே வைத்து விட்டு தெருவோரமாகப் போனான்.

அந்த வழியாகப் போன திருடன் ஒருவன் இதை கவனித்தான். மெதுவாக பாத்திரத்தை எடுத்துத் தன் தலைமீது வைத்துக் கொண்டு அவனும் தெருவோரமாகப் போய் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான்.

பாத்திரத்தின் உரிமையாளன் திரும்பி வந்து பார்த்தால் பாத்திரத்தைக் காணவில்லை.

'எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறாய்! என் தலையில் இருக்கும் பாத்திரத்தைப் பார்த்தாயா? திருட்டுப் போய் விடக்கூடாது என்று தலையில் வைத்துக் கொண்டேன். உன்னை மாதிரி தரையில் வைத்து விட்டுப் போனால் திருடு போகாமல் என்ன நடக்கும்' என்று திருடன் உரிமையாளனைத் திட்டி விட்டு பாத்திரத்தோடு நடையைக் கட்டினான்.

சீன நகைச்சுவைகள் #31

மனைவிக்கு நடுங்கியவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் ஒருவன். ஒரு நாள் அவளைக் கடுப்பேற்றியதற்குத் தண்டனையாக, அவனது விரல்களைக் குச்சிகளுக்கு இடையே வைத்து நசுக்கித் தண்டிக்க முடிவு செய்தாள் மனைவி.

"வீட்டில் குச்சி எதுவும் இல்லை!" என்று சொன்னான்.

அடுத்த வீட்டுக்குப் போய் இரண்டு குச்சிகளை கடன் வாங்கிக் கொண்டு வர அனுப்பினாள் மனைவி. வெளியே போகும் போது ஏதோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. உடனேயே அவனைத் திரும்பக் கூப்பிட்டுக் கேட்டாள்

"என்ன! முணுமுணுத்துக்கிட்டு போறே?"

"ஒண்ணுமில்லே, தண்டனைக்கான கருவிகள் நம்ம வீட்டிலேயே இருக்கணும்னு சொன்னேன் அவ்வளவுதான்"

சீன நகைச்சுவைகள் #32

ஒரு கொள்ளைக்காரனும் நன்கொடை கேட்டுப் போகும் பூசாரியும் ஒன்றாக காட்டில் நடந்து கொண்டிருந்தார்கள். எதிரில் திடீரென்று ஒரு புலி வந்து அவர்கள் மேல் பாய்ந்தது.

கொள்ளைக்காரன் உடம்பைக் குனிந்து போராடத் தயாரானான். புலி பயப்படாமல் அவர்களை நோக்கி வந்தது. கடைசி முயற்சியாக, தனது நன்கொடை புத்தகத்தை புலியின் மீது வீசினார் பூசாரி. உடனேயே புலி பயத்தில் பின்வாங்கி ஓடி விட்டது.

"அப்பா, அது எப்படி கொள்ளைக்காரனைப் பார்த்துக் கூட உங்களுக்கு பயமில்லை. இந்த பூசாரி இப்படி பயப்படுத்தி விட்டானே" புலிக்குட்டி புலியிடம் கேட்டது.

"கொள்ளைக்காரன் எதிர்த்து வந்த போது, அவனுடன் கட்டிப் புரண்டு சண்டை போடத் தயாராகிக் கொண்டேன். ஆனால், பூசாரி என்னிடம் நன்கொடை வாங்க வரும் போது அவனை திருப்பி அனுப்புவது எப்படி என்று எனக்குத் தெரியாதே!"