வெள்ளி, 29 ஏப்ரல், 2011

#சீன நகைச்சுவைகள் #34

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு சாலைகளின் சந்திப்பில், மரத்தால் செய்யப்பட்ட கடவுளின் சிலையுடன் கோயில் ஒன்று இருந்தது.

அந்த வழியாகப் போன வழிப்போக்கன் ஒருவன், தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தைத் தாண்டுவதற்கு இந்த சிலையை பெயர்த்து எடுத்துக் குறுக்காகப் போட்டு அதன் மீது நடந்து தாண்டிப் போய் விட்டான்.

இன்னொரு மனிதன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தான். கடவுளின் சிலை இப்படி அழுக்குத் தண்ணீரில் விழுந்திருப்பதைப் பார்க்க சகிக்காமல், உடனேயே சிலையை எடுத்து முதுகில் சுமந்து கொண்டு சென்று கோவிலுக்குள் அதன் பீடத்தில் நிறுத்தினான்.

அந்தக் கடவுள், 'முறையான பூசை செய்து, அகில்புகை போடத் தவறியதாக' அந்த மனிதன் மீது குற்றம் சொல்லி, தாங்க முடியாத தலைவலியை சாபமாகக் கொடுத்தார்.

கடவுளுக்கு அருகில் இருந்த குட்டி தேவதைகள், "உங்கள் சிலையின் மீது நடந்தவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. உங்களுக்கு உதவி செய்தவனுக்கு தலைவலியை சாபமாகக் கொடுக்கிறீர்களே, ஏன்?" என்று கேட்டார்கள்.

"இரக்க குணம் (பக்தி) உள்ள மனிதர்களைத்தான் நாம் மிரட்டி சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாதா!" என்று விளக்கம் அளித்தார் கடவுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக